கடலூர் சாவடியில் விபத்து:தடுப்புக்கட்டையில் மோதி லாரி கவிழ்ந்ததுடிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

கடலூர் சாவடி சாலையில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2023-05-09 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சரவணன்(வயது 31). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் லாரியில் பழங்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருவில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை கடலூர் சாவடி மெயின்ரோட்டில் வந்த போது, திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் லாரி மோதியது.

மோதிய வேகத்தில் லாரி, தடுப்புக்கட்டையின் மீது ஏறியபடி சிறிது தூரம் சென்று நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இருப்பினும் இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் உருக்குலைந்தது. லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக கிடந்தன.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர்.

இருப்பினும் இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்