கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜவுளிக்கடை மீது மோதியது

கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜவுளிக்கடை மீது மோதியது

Update: 2023-01-09 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 45). இவர் தனக்கு சொந்தமான லாரியில் நேற்று காலையில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டு இருந்தார். கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பஸ் நிறுத்தத்தை கடந்து வந்தபோது, திடீரென மணிமாறனின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. தொடர்ந்து சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு சர்வீஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த ஜவுளிக்கடை மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் லாரியில் இருந்த மணிமாறன் பலத்த காயம் அடைந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரேனை வரவழைத்து, இடிபாடுகளில் சிக்கி இருந்த மணிமாறனை சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஜவுளிக்கடையில் இருந்த உரிமையாளர் கோவில்பாளையத்தை சேர்ந்த அப்புசாமி(66), விபத்தில் லேசான காயத்துடன் தப்பினார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்