மோட்டார் சைக்கிளில் மோதி, ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்ற லாரி
விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிளில் மோதி, ஒரு கிலோ மீட்டர் தூரம் லாரி இழுத்து சென்றது.
விருத்தாசலம்,
நெய்வேலியில் இருந்து அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விருத்தாசலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் லாரியின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதை கவனிக்காத டிரைவர், தொடர்ந்து லாரியை ஓட்டிச் சென்றார். இதில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அந்த மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்றது. இதை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், லாரியை மறித்தனர். பின்னர் டிரைவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து டிரைவரை பொதுமக்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அப்போது டிரைவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.