தடுப்புச்சுவரில் மோதிய லாரி

கோபால்பட்டி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பு கட்டப்பட்ட தடுப்புசுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.;

Update: 2023-06-17 19:30 GMT

கோபால்பட்டியில், திண்டுக்கல் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு, சாலையின் நடுவே தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் கட்டப்பட்ட நாள் முதல், வாகனங்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு, தடுப்புச்சுவரின் முன்பு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததும், அறிவிப்பு பலகை வைக்காமல் இருப்பதுமே தான் காரணம் ஆகும். இதனால் இரவுநேரத்தில், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. அதன்படி கடந்த வாரம், விறகு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் தடுப்புச்சுவர் சேதம் அடைந்தது. அதன்பிறகும் தடுப்புச்சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று, டயர் வெடித்து தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அவசர, அவசரமாக அங்கு ஒளிரும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை முன்கூட்டியே நெடுஞ்சாலைத்துறையினர் செய்திருந்தால், ஏற்கனவே நடந்திருந்திருந்த விபத்துக்களை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேபோல் கோபால்பட்டி பஸ் நிறுத்தம் வரை தடுப்புச்சுவரின் நீளத்தை நீட்டிக்க வேண்டும். கோபால்பட்டி பஸ் நிறுத்தத்தின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்