ஊட்டி
ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் லவ்டேல் என்ற இடத்தில் தொடர் மழையால் நேற்று இரவில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஊட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள், மரத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதேபோன்று பந்தலூர் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது.