ரூ.1500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
ஓட்டாத மோட்டார் சைக்கிளுக்கு நாகை போக்குவரத்து போலீசார் ரூ.1500 அபராதம் விதித்து உள்ளனர்.
ஓட்டாத மோட்டார் சைக்கிளுக்கு நாகை போக்குவரத்து போலீசார் ரூ.1500 அபராதம் விதித்து உள்ளனர்.
ஓட்டாத மோட்டார் சைக்கிள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி(வயது 48). இவர், கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு, வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் சேதம் அடைந்த அவரது மோட்டார் சைக்கிளும் பழுது நீக்காமல், வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளார்.
ரூ.1500 அபராதம்
இந்த நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் எண்ணுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதைப்பார்த்ததும் முரளி அதிர்ச்சி அடைந்தார்.
அந்த குறுஞ்செய்தியில், நாகை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகவும், ஒரு வாகனத்தில் 3 பேர் அமர்ந்து சென்றதாகவும், வாகன தணிக்கையில் ஈடுபட்ட நாகை போக்குவரத்து போலீசார் ரூ.1500 அபராதம் விதித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தவறுதலாக பதிவு
விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் தனக்கு நாகை மாவட்டத்தில் விதியை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதுபோல, ஓட்டாத மோட்டார் சைக்கிளுக்கு அபராதம் விதித்திருப்பதாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து முரளி செய்வதறியாது திகைத்தார்.
இது தொடர்பாக நாகை போக்குவரத்து போலீசாரை போனில் தொடர்பு கொண்டு முரளி கேட்டதற்கு, சீர்காழி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து முரளி கூறும்போது, மோட்டார் சைக்கிளின் எண்ணை போலீசார் தவறுதலாக பதிவு செய்திருக்கலாம் எனவும், முறையாக ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.