தீயில் எரிந்து டிராக்டர் நாசம்

பொறையாறு அருகே டிராக்டரில் ஏற்றப்பட்ட வைக்கோல் கட்டுகள் மின்கம்பி மீது உரசியது. இதனால் வைக்கோல் கட்டுகளுடன் டிராக்டர் தீயில் எரிந்து நாசமடைந்தது.

Update: 2023-03-29 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு அருகே டிராக்டரில் ஏற்றப்பட்ட வைக்கோல் கட்டுகள் மின்கம்பி மீது உரசியது. இதனால் வைக்கோல் கட்டுகளுடன் டிராக்டர் தீயில் எரிந்து நாசமடைந்தது.

வைக்கோல் கட்டுகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபிரபு. நேற்று முன்தினம் மாலை இவருக்கு சொந்தமான வயலில் இருந்த வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, அந்த பகுதியில் உள்ள களத்தில் இறக்க சென்றனர்.

டிராக்டரை மயிலாடுதுறை அருகே மேலமங்கநல்லூரை சேர்ந்த சரவணன் ஓட்டினார். வயலில் டிராக்டர் சென்றபோது அங்கு சென்ற மின்கம்பிகள் மீது வைக்கோல் உரசியதால் வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றியது.

டிராக்டர் எரிந்து நாசம்

அப்போது வைக்கோல் கட்டுகள் முழுவதும் மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே டிரைவர், டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு உயிர் தப்பினார். தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் வயலின் நடுவே தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு செல்ல முடியாத காரணத்தால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையே வைக்கோல் கட்டுகளுடன் டிராக்டர் முற்றிலும் எரிந்து நாசமடைந்து விட்டது. இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்