நிலத்தை உழுத போது கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது; விவசாயி சாவு

நிலத்தை உழுத போது கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது. அதில் இருந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-25 17:56 GMT

கந்தம்பாளையம்:

நிலத்தை உழுத போது கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது. அதில் இருந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

கந்தம்பாளையம் அருகே அருணகிரி பாளையம் ஓடக்காடு புதூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 61). விவசாயி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரை கொண்டு உழவு செய்து கொண்டிருந்தார்.

அந்த விவசாய நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது. நிலத்தை உழவு செய்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், டிராக்டரை தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்.

பரிதாப சாவு

அதற்குள் டிராக்டர், விவசாய நிலத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. சண்முகமும் டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்தார். தலையில் அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சண்முகம் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சண்முகம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரை கிணற்றில் இருந்து மீட்டனர். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டிராக்டர் கிணற்றுக்குள் பாய்ந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்