கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-06-17 19:33 GMT

பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு குட்கா கடத்திய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சைக்கு கடத்தல்

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் கடந்த மாதம் (மே) 19-ந் தேதி தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சொகுசு காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான, 2 ஆயிரத்து 221 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, தஞ்சை தெற்கு அலங்கம் சுல்தான்ஜியப்பா சந்து பகுதியை சேர்ந்த பக்காராம் (48), கீழவாசல் கந்தபொடிகார தெருவை சேர்ந்த முகமது பாரூக் (35), மேம்பாலம், இந்திரா நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (42), திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலை வளையல் காரதெருவை சேர்ந்த சோழாராம் (41) ஆகியோர் உட்பட 6 பேரை தஞ்சை மேற்கு போலீசார் கைது செய்தனர். அதில் சிறுவன் உள்பட 2 பேரை தவிர 4 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்தநிலையில் பக்காராம், முஹமத் பாருக், பன்னீர்செல்வம், சோழாராம் ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, பரிந்துரையின் பேரீல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராம்தாஸ் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.

இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்