மினிபஸ்சில் இடம்பிடிப்பதற்காக போடப்பட்ட நகைபை திருட்டு

மினிபஸ்சில் இடம்பிடிப்பதற்காக போடப்பட்ட நகைபையை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-23 18:45 GMT

சின்னசேலம். 

சின்னசேலம் அருகே வி.மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி பூங்கோதை (வயது 37). மகளிர் சுயஉதவிக்குழுவில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மகளிர் சுயஉதவிக்குழு பணி தொடர்பாக சென்றார். அப்போது கட்டப்பை ஒன்றில் 3 ½ பவுன் நகை மற்றும் 9 ஆயிரம் ரொக்கத்தை அவர் எடுத் துசென்றார். பின்னர் அங்கு வேலை முடிந்ததும், சொந்த ஊருக்கு செல்வதற்காக சின்னசேலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக அவர் காத்திருந்தார். அப்போது வி.மாமந்தூருக்கு செல்லும் மினிபஸ் வந்தபோது, அதில் ஏற பயணிகள் முண்டியடித்தனர். இதையடுத்து பஸ்சில் இடம்பிடிப்பதற்காக தான் வைத்திருந்த கட்டப்பையை பயணிகள் அமரும் சீட்டில் ஜன்னல் வழியாக போட்டார். பின்னர் பஸ்சில் ஏறி பின்பு தான் கட்டப்பையை போட்ட சீட்டை பார்த்தபோது, அதில் கட்டப்பை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சி்ன்னசேலம் போலீசார் மினிபஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது அதில் பூங்கோதை நகை மற்றும் பணம் வைத்திருந்த கட்டப்பையை பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுநிலா கிராமத்தை சேர்ந்த நவ்ஷத்அலி (வயது 23) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்