நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் 18-ந் தேதி நடக்கிறது
ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்க தீர்ப்பையொட்டி நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கம்
சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசினால் நியமிக்கப்பட்ட வக்கீல்கள் சிறப்பாக வாதாடியதின் மூலம் இந்த தீர்ப்பு பெறப்பட்டதாகவும், இதனால் தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டமும், பாராட்டு விழாவும் நடத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் முடிவு செய்தனர். புதுக்கோட்டை சிப்காட் அருகே தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5-ந் தேதி நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கிடையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த விழா எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்
இந்தநிலையில் வருகிற 18-ந் தேதி நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும், இதில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசுவார் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் 18-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.