பட்டாசு வெடித்ததில் கோவில் திருவிழா பந்தல் தீப்பிடித்து எரிந்தது
ஆழ்வார்குறிச்சி அருகே பட்டாசு வெடித்ததில் கோவில் திருவிழா பந்தல் தீப்பிடித்து எரிந்தது.
கடையம்:
கடையம் அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பில் உள்ள கருப்பசாமி கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா முடிந்தது. இந்தநிலையில் அருகில் உள்ள அய்யா கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. அதற்காக கடனாநதி அணை அடிவாரத்தில் இருந்து ஊர்வலமாக பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது அதில் இருந்து பறந்த தீப்பொறி, கருப்பசாமி கோவிலில் போடப்பட்ட பந்தல் மீது விழுந்து தீப்பிடித்தது. அங்குள்ள பொதுமக்கள் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் பந்தல் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. கோவிலில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.