காரை ஓட்டி பார்ப்பதாக கடத்தி சென்ற வாலிபர் கைது

அஞ்சுகிராம் அருகே துணி வியாபாரி ஆன்லைன் மூலம் விற்க முயன்ற காரை ஓட்டி பார்ப்பதாக கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-04 20:29 GMT

அஞ்சுகிராமம், 

அஞ்சுகிராம் அருகே துணி வியாபாரி ஆன்லைன் மூலம் விற்க முயன்ற காரை ஓட்டி பார்ப்பதாக கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

துணி வியாபாரி

விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் பிரசாந்த் (வயது29). இவர் அஞ்சுகிராமம் மேட்டுகுடியிருப்பில் அருகே உள்ள வாரியூரில் தங்கி இருந்து துணி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்துக்காக ஒரு கார் வைத்திருந்தார்.

அந்தக் காரை விற்பனை செய்ய செல்போனில் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்தார். இதைக் கண்ட வாலிபர் ஒருவர் பிரசாந்தை தொடர்பு கொண்டு, 'உங்கள் காரை நான் வாங்குவேன். நீங்கள் காரை நேரில் கொண்டு வாருங்கள்' என்றார். அவரது சொல்லை நம்பிய பிரசாந்த் அஞ்சுகிராமம் அருகே உள்ள நாற்கரச்சாலையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு காரை கொண்டு சென்றார்.

கடத்தி சென்றார்

அங்கு வந்த வாலிபர் தனது காரை நிறுத்தி விட்டு பிரசாந்த் கொண்டு வந்த காரை ஓட்டி பார்க்கிறேன் என்று சொல்லி எடுத்து சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தனது காரை கடத்தி சென்றதை உணர்ந்த பிரசாந்த் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் தனிப்படை அமைத்து வாலிபரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் (30) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து காரை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்