வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நத்தம் அருகே உள்ள அஞ்சுகுளிபட்டியை சேர்ந்தவர் ராஜூ. அவருடைய மகன் ஆண்டிச்சாமி (வயது 24). இவர், கடந்த 2018-ம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா விசாரணை நடத்தினார்.
பின்னர் ஆண்டிச்சாமி மீது 'போக்சோ ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி விஜயகுமார் தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்டிச்சாமிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.