ஏரியில் காயத்துடன் இறந்து கிடந்த வாலிபர்
ஏரியில் காயத்துடன் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள இடையான்குளம் ஏரியில் மர்மமான முறையில் 37 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தண்ணீரில் மிதந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு பார்த்தபோது அவர் மேலக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது இளைய மகன் பழனிசாமி(37) என்பது தெரிய வந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் பழனிசாமியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலையில் காயம் இருப்பதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பழனிசாமி வீட்டை விட்டு வெளியில் வந்து 2 நாட்களுக்கு மேல் ஆவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த பழனிசாமி உடன் பிறந்தவர்கள் பழனிசாமியை சேர்த்து 6 சகோதரர்களும், 5 சகோதரிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.