மோட்டார் சைக்கிளை கால்வாயில் வீசிய வாலிபர்
அருமனையில் பெட்ரோல் வாங்க பணம் இல்லாததால் மோட்டார் சைக்கிளை கால்வாயில் வீசிய போதை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அருமனை,
அருமனையில் பெட்ரோல் வாங்க பணம் இல்லாததால் மோட்டார் சைக்கிளை கால்வாயில் வீசிய போதை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கால்வாயில் கிடந்த மோட்டார் சைக்கிள்
அருமனை அருகே புண்ணியம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே ஒரு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் நேற்று காலையில் ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்தது. இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரவில் சாலை வழியாக வந்த யாரோ மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என கருதினர். இதனால், கால்வாயில் யாராவது கிடக்கிறார்களா? என தேடினர். ஆனால் அப்படி யாரும் இல்லை.
பாலத்திற்கு அடியில் குப்பைகள், கழிவுகள் அடைந்து இருந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவரின் நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் பரிதவித்தனர். அவரை தண்ணீர் அடித்து சென்றதா? அல்லது அங்கு குப்பைகளுக்கு இடையே புதைந்தாரா? என்பது தெரியாமல் பதற்றம் அடைந்தனர்.
வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர்
தொடர்ந்து பொதுமக்கள் சிலர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை கால்வாயில் இருந்து மீட்டு அது யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அது மாத்தூர்கோணம் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரின் மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரின் உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது வாலிபர் வீட்டுல் தூங்கிக் கொண்டிருந்தது ெதரிய வந்தது. வாலிபரிடம் மோட்டார் சைக்கிளைப் பற்றி கேட்ட போது முன்னுக்குபின் முரணாக பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்களிடம் விசாரித்த போது நேற்று முன்தினம் இரவு அந்த வாலிபர் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரிய வந்தது. அவர் புண்ணியம் பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. அவரிடம் பெட்ரோல் வாங்க பணம் இல்லை.
கால்வாயில் தூக்கி வீசினார்
அப்போது அந்த வழியாக வந்த சிலரிடம் பெட்ரோல் வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால், யாரும் பணம் கொடுக்கவில்லை.
இதனால், விரக்தி அடைந்த அவர் 'பெட்ரோல் இல்லாத வண்டி எதற்கு' என்று புலம்பி கொண்டு மோட்டார் சைக்கிளை தூக்கி சாலையில் இருந்து கால்வாய்க்குள் வீசியுள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்று எதுவும் நடக்காதது ேபால் நிம்மதியாக தூங்கியுள்ளார்.
மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்ததையடுத்து அந்த பகுதியில் கூடியவர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.