மணல் திட்டில் இருந்து கடலில் குதித்த வாலிபர், நீந்தி தனுஷ்கோடியில் கரை சேர்ந்தார்
இலங்கை கடற்படைக்கு பயந்து தனுஷ்கோடி அருகே 5-வது மணல் திட்டு பகுதியில் இருந்து கடலில் குதித்து நீந்தியே தனுஷ்கோடி வந்தார்.
பனைக்குளம்
இலங்கை கடற்படைக்கு பயந்து தனுஷ்கோடி அருகே 5-வது மணல் திட்டு பகுதியில் இருந்து கடலில் குதித்து நீந்தியே தனுஷ்கோடி வந்தார்.
கடலில் குதித்தார்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 5-வது மணல் திட்டு பகுதியில் அகதிகள் சிலர் தவிப்பதாக மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீசார், மணல் திட்டு பகுதிக்கு சென்று அங்கு தவித்த கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ள ஒரே குடும்பத்தினர் 5 பேரை படகில் ஏற்றி மீட்டு வந்து அதன் பின்னர் விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
இந்த அகதிகளுடன் வந்த வாலிபர் ஒருவர் இலங்கை கடற்படைக்கு பயந்து தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் கடலில் குதித்தார். அவரை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டது. இதில் இருந்து தப்பி அவர் கடலில் குதித்து மாயமாகி விட்டார். ஆனால், அவர் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது.
நீந்தியே கரை சேர்ந்தேன்
இந்தநிலையில் கடலில் குதித்து மாயமான இலங்கையை சேர்ந்த அந்த வாலிபர் நேற்று மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், மண்டபம் கடலோர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா தலைமையில் கடலோர போலீசார் மற்றும் மத்திய-மாநில உளவுபிரிவு போலீசாரும் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது, எனது பெயர் ஹசன்கான்(வயது 24). பெற்றோர், உறவினர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கி உள்ளனர். 2020-ம் ஆண்டு இலங்கைக்கு சென்று அங்கு மீன்பிடித் தொழில் செய்து வந்தேன்.
தற்போது அங்கு வருமானம் இல்லாததால் கடந்த 5-ந் தேதி இரவு மன்னார் தாழ்வாடி பகுதியில் இருந்து 5 பேருடன் இந்தியா புறப்பட்ட பிளாஸ்டிக் படகில் ஏறி மணல் திட்டுப் பகுதியில் வந்து இறங்கினேன். மறுநாள் அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடற்படைக்கு பயந்து 5-வது மணல் திட்டிலிருந்து கடலில் குதித்து நீந்தியே மாலை 6 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து சேர்ந்தேன். பின்னர் திருப்புல்லாணி அருகே குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி இருந்தேன் என்றார்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கடலில் நீந்தி கரை வந்து சேர்ந்த வாலிபர் ஹசன்கான் நேற்று மண்டபம் அகதிகள் முகாமுக்கு திரும்பியதால் கடலோர போலீசாரும், அந்த வாலிபரின் உறவினர்களும் நிம்மதி அடைந்தனர்.