கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது
குலசேகரம் அருகே உள்ள கால்வாயில் பிணமாக கிடந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது.
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள கால்வாயில் பிணமாக கிடந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது.
கால்வாயில் ஆண் பிணம்
குலசேகரம் அருேக சுருளோடு வெட்டுத்திருத்தி கோணம் பகுதியில் தோவாளை கால்வாய் உள்ளது. கடந்த 16-ந் தேதி இந்த கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த ஒரு ஆண் பிணத்தை குலசேகரம் போலீசார் கைப்பற்றினர். ஆனால் அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.
பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அடையாளம் தெரிந்தது
இந்தநிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வைக்கல்லுபட்டியை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் தனது மைத்துனர் மாயமானதாக போலீசாரிடம் கூறினார். மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகளின் நிறம் உள்ளிட்ட அடையாளங்கள் சுருளக்கோடு கால்வாயில் பிணமாக கிடந்தவருடன் ஒத்து போனது.
இதையடுத்து மாயமானவரின் சகோதரி உஷா மற்றும் அவரது கணவர் ஆகிய 2 பேரும் நேற்று குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அழைத்துச் சென்ற போது உடலை பார்த்து கதறி அழுதனர். விசாரணையில், இறந்தவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வைக்கல்லுப்பட்டியை சேர்ந்த மாரி சிவபாலன் (வயது 34) என்பதும், கைக்கெடிகாரம் பழுது நீக்கும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மாரி சிவபாலனுக்கு தாய், தந்தை இல்லை. சகோதரி உள்ளார். மாரி சிவபாலனுக்கு மதுப்பழக்கம் உண்டு. குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த உறவினரை பார்க்க வந்துள்ளார்.
உடல் ஒப்படைப்பு
பின்னர் 12-ந் தேதி வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாரி சிவபாலன் மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றனர். இதையடுத்து போலீசார் மாரி சிவபாலனின் உடலை அவரது தங்கை மற்றும் உறவினரிடம் ஒப்படைத்தனர். அதே சமயத்தில் அவர் சாவில் மர்மம் இருந்தது.
எனினும் மதுபோதையில் மாரி சிவபாலன் கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.