மதுபோதையில் குருசடிக்குள் புகுந்து கண்ணாடிகளை உடைத்த வாலிபர்

மேல்புறத்தில் மதுபோதையில் குருசடிக்குள் புகுந்து கண்ணாடிகளை உடைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-10 21:49 GMT

களியக்காவிளை:

மேல்புறத்தில் மதுபோதையில் குருசடிக்குள் புகுந்து கண்ணாடிகளை உடைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

போதை வாலிபர்

அருமனை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மேல்புறம் பகுதியில் ஒரு தனியார் மதுபாரும் அதன் அருகில் புனித அந்தோணியார் குருசடியும் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாருக்கு சென்றார்.

பின்னர், அங்கிருந்து வெளியேறிய அவர் போதை தலைக்கேறியதால் திடீரென அருகில் இருந்த புனித அந்தோணியார் குருசடிக்குள் புகுந்தார்.

கண்ணாடி உடைப்பு

அங்கிருந்த அந்தோணியார் சொரூபத்தின் கண்ணாடிகளை கையால் உடைத்தார். இதில் சொரூபத்தின் கண்ணாடிகள் உடைந்து நொருங்கின. மேலும், அருகில் இருந்த புத்தகத்தையும் கிழித்து எறிந்தார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பொதுமக்கள், வாலிபர் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி அருமனை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்