பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணின் கைவிரலை கடித்த வாலிபர்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணின் கைவிரலை வாலிபர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-09-02 20:30 GMT

பஸ்சுக்காக காத்திருந்த பெண்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளுக்கும், வெளியூர்களுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் நகர், புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் ஏறி பயணம் செய்வார்கள். இதனால் காலை, மாலை நேரங்களில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

அதன்படி நேற்று காலையில் திண்டுக்கல் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு செல்வதற்காக பஸ் நிலைய வளாகத்தில் ஒரு பெண் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வாலிபர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார்.

கைவிரலை கடித்தார்

ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த வாலிபர், பெண்ணின் கைவிரலை பிடித்து கடித்தார். இதில் அவருடைய விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் தரையில் சொட்ட தொடங்கியது. மேலும் வலியால் அந்த பெண் அலறி துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பெண்ணை காப்பாற்ற ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பின்னர் வலியால் அலறித் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரியவந்தது.

பரபரப்பு

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து திண்டுக்கல்லில் உள்ள தந்தை வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள கிராமத்துக்கு வேலைக்கு சென்று தனது பிள்ளைகளை வளர்த்து வருகிறார். வேலைக்கு செல்வதற்காக பஸ் நிலையம் வரும் போதெல்லாம் அங்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த கணவர் நேற்று ஆத்திரத்தில் அந்த பெண்ணின் கைவிரலை கடித்ததும் தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்