பெரியார் பல்கலைக்கழகம் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்-போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-27 22:45 GMT

கருப்பூர்:

முற்றுகை போராட்டம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு நேற்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு மற்றும் இந்திய வாலிபர் சங்கம் ஆகியவை இணைந்து 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ், மண்டல செயலாளர் லோகநாதன், இந்திய வாலிபர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாநில துணைத்தலைவர் தேன்மொழி, மாவட்டத் தலைவர் பவித்ரன் ஆகியோர் முன்னிலை வைத்தார்.

போலீசாருடன் வாக்குவாதம்

ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திட வேண்டும். ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கிய ஆராய்ச்சி பாட திட்ட குழு கூட்டத்தினை உடனே நடத்த வேண்டும், ஆட்சி மன்ற குழு கூட்டத்தினை உடனே நடத்த வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தின் நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆசிரியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, உதவி கமிஷனர் நாகராஜன், கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன் ஆகியோர் ஆசிரியர் குழு மற்றும் மாணவ குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, துணைவேந்தர் எங்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்றனர். தொடர்ந்து அதிகாரிகள் ஏற்பாட்டின் பேரில் போராட்டம் நடத்தியவர்களிடம் துணைவேந்தர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்