ஆசிரியை கழுத்தை நெரித்துக்கொலை

உடன்குடியில் ஆசிரியை கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-05-10 18:45 GMT

உடன்குடி:

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் வாலிபரை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.

உடன்குடியில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆசிரியை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ரஸ்கின்டிரோஸ். இவரது மனைவி மெட்டில்டா (வயது 55). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுடைய மகன் ெசன்னையில் உள்ளார். அதுேபால் ரஸ்கின்டிரோசும் மும்பையில் வசித்து வருகிறார். இதனால் மெட்டில்டா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கதவு திறக்கவில்லை

நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் ஆசிரியை வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மெட்டில்டா வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்த்தினர் குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுக்க அங்கிருந்து சென்று விட்டனர்.

பிணமாக கிடந்தார்

போலீசார் அங்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மெட்டில்டா பிணமாக கிடந்தார். அவரது கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தை மோப்பம் பிடித்து சென்றது. கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்து சென்றனர்.

கழுத்தை நெரித்துக்கொலை

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நேற்று மதியம் வீட்டில் மெட்டில்டா தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர் உள்ளே புகுந்து கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மெட்டில்டா சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர், மெட்டில்டா கழுத்தை நெரித்துக் கொலை செய்து உள்ளார். இதற்கிடையே அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், தான் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்த மர்மநபர் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளார். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க சென்ற நேரத்தில் வீட்டின் கதவை நைசாக திறந்து வெளியே சென்றுவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நகை, பணத்திற்காக ெமட்டில்டா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

வாலிபரிடம் விசாரணை

இதற்கிடையே, மெட்டில்டா வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உடன்குடியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்