சாலையோரத்தில் ஆசிரியர் மர்மச்சாவு

மார்த்தாண்டத்தில் சாலையோரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

Update: 2023-07-09 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் சாலையோரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

தனியார் பள்ளி ஆசிரியர்

மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் பாலாசிங் (வயது 52). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மனைவி பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் பாலாசிங் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலாசிங்கை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலாசிங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காரணம் என்ன?

இதுகுறித்த புகாரின் பேரில் ஆசிரியரின் மர்மச்சாவு தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது பிரேத பரிசோதனையின் முடிவில்தான் தெரியவரும் என போலீசாா் தெரிவித்தனர்.

தனியார் பள்ளி ஆசிரியர் சாலையோரத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்