வேன் சக்கரத்தில் சிக்கி ஆசிரியை பலி
காட்பாடியில் வேன் சக்கரத்தில் சிக்கி தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இருந்தார்.;
தனியார் பள்ளி ஆசிரியை
வேலுார் சலவன்பேட்டையை சேர்ந்தவர் மதன்குமார். மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 36). இவர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வேலூரில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
காட்பாடி கல்புதுார் அருகே சென்றபோது, முதியவர் ஒருவர் சைக்கிளில் திடீரென குறுக்கே வந்துள்ளார். இதனால் தனலட்சுமி நிலைதடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி கீழே விழுந்தார்.
சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது சித்துாரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மினிவேன் தனலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக அதே இடத்தில் இறந்தார். டிரைவர் மினிவேனை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மினி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.