ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகள் திருட்டு
ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
நகைகள் திருட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாச நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம்(வயது 45). இவர் கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி(36). இவர் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மீனாட்சியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், நாகலிங்கமும், மீனாட்சியும் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு இரவில் மீனாட்சியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் நாகலிங்கம் நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது வீட்டு கதவுகள் திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த 6½ பவுன் நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிக்கொண்டு, பின்பக்க கதவின் பூட்டை உடைத்து தப்பி சென்றிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து நாகலிங்கம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அரியலூரில் இருந்து மோப்பநாய் மலர் வரவழைக்கப்பட்டது. திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு பின்பக்க வாசல் வழியாக ஓடிய மோப்பநாய், பின்னர் முன்பக்க வாசல் வழியாக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
மேலும் அந்த வீட்டின் கதவு, பீரோ, பூட்டு உள்ளிட்டவைகளில் பதிவான கை ரேகைகளை கைரேகை நிபுணர் துர்கா சேகரித்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.