வரிவிதிப்பு தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும்

வரிவிதிப்பு தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-05-23 14:08 GMT

குடியாத்தம்

வரிவிதிப்பு தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வரி விதிப்புக்கு எதிர்ப்பு

குடியாத்தம் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தலைமையில் அ.தி.மு.க., புரட்சிபாரதம், பா.ஜ.க. கவுன்சிலர்கள், வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அந்த தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வார்டுக்கும் 5 லட்சம் ரூபாக்கான பணிகள் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும், வார்டுகளில் துப்புரவு பணிக்கு 5 பேர் நியமிக்கப்படும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்.

தூய்மை பணிக்கு முக்கியத்துவம்

தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. கவுன்சிலர் கோவிந்தராஜ், நகராட்சி அதிகாரிகள் சரிவர செயல்படுவது இல்லை எனவும், பல முறை அடிப்படை பிரச்சினைகள் குறித்து கூறியும் நடவடிக்கை இல்லை என தெரிவித்து கருப்புச் சட்டையுடன் கலந்துகொண்டார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். மேலும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

குடியாத்தம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களை அதிகப்படுத்த வேண்டும். தனியார் துப்புரவு பணியாளர்களை நியமித்து தூய்மை பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என உறுப்பினர்கள் பேசினார்கள்.

அ.தி.மு.க. உறுப்பினர் ராணி பாஸ்கர் பேசுகையில் வார்டில் உள்ள பழுதான கழிப்பிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டி தரவேண்டும், பெண் உறுப்பினர்களுக்கு தனியாக அறை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஒத்துழைக்க வேண்டும்

தலைவர் சவுந்தரராசன் பேசுகையில் கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. நகராட்சியின் வருவாயைக் கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. பல ஆண்டுகளாக வரி உயர்வு செய்யாததால் நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் அடிப்படை வசதிகள் செய்ய தாமதமாகிறது. வரி உயர்வுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் நகராட்சிக்கு வருவாய் பெருகும். அடிப்படை வசதிகள் செய்து தர முடியும் என்றார்.

உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்