பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்கும் பணி

சீர்காழி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்கும் பணியை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-28 13:34 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்கும் பணியை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

சாலையில் சுற்றித்திரிகின்றன

சீர்காழி நகர் பகுதிக்குட்பட்ட தென்பாதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கடைவீதி, ஈசானிய தெரு, தேர் கீழவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, இரணியன் நகர், ெரயில்வே ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தோடு சாலையில் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

நாய்கள் பிடிக்கும் பணி

இதை தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட ஈசானிய தெரு, பாரதிதாசன் தெரு, தென்பாதி, தேர்தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நேரு காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த நாய்களை, பப்ளிக் பார் அனிமல்ஸ் அமைப்பு செயலாளர் அன்பழகன் தலைமையில் ஏராளமான பணியாளர்கள் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்ட நாய்களை காயமின்றி பிடித்து வேனில் அடைத்தனர்.

நகர் மன்ற தலைவர் ஆய்வு

இந்த பணியினை நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து பப்ளிக் பார் அனிமல் சங்க செயலாளர் அன்பழகன் கூறுகையில் சீர்காழி நகர் பகுதியில் தினமும் சுற்றித் திரியும் 50 நாய்களை காயமின்றி உயிருடன் பிடித்து வேனில் கொண்டு சென்று மயிலாடுதுறையில் உள்ள நாய் அறுவை சிகிச்சை மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின்னர் 2 நாட்கள் கழித்து நல்ல நிலையில் உள்ள நாய்களை மீண்டும் சீர்காழி நகர் பகுதியிலேயே விடப்படும். இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

நடவடிக்கை

நகர்மன்ற தலைவர் கூறுகையில் சீர்காழி நகரத்தில் உள்ள 24 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது மிருகவதை தடுப்பு சட்ட ஆய்வாளர் முரளிதரன், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

---


Tags:    

மேலும் செய்திகள்