கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரம்

கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.;

Update: 2023-10-14 02:08 GMT

பவானிசாகர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பவானிசாகர் அருகே உள்ள கிராமத்துக்குள் புகுந்து வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது. அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் இருந்து கபில்தேவ், முத்து ஆகிய 2 காட்டு யானைகள் பவானிசாகர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டன.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் சுதாகர் மேற்பார்வையில் விளாமுண்டி வனச்சரகர் கணேச பாண்டியன், பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் ஆகியோரை கொண்ட வனக்குழுவினர் காட்டு யானையை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவர் சதாசிவம், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவர் விஜயராகவன், தர்மபுரி வனப்பகுதி கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் வனத்துறை குழுவினருடன் இணைந்து காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தயார் நிலையில் இருந்தனர். வனத்துறை குழுவினர் காட்டு யானையை விளாமுண்டி வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. காட்டு யானை தென்பட்டால், அதை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்தில் கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்