பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கும் பணி

கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து வெளியேறி பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-05-30 17:36 GMT

வேதாரண்யம்:

கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து வெளியேறி பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வனவிலங்கு சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், குரங்குகள், மட்ட குதிரைகள், நரி, முயல், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

இந்த பசுமைமாறா காட்டில் உள்ள விலங்குகளை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள், உணவு ஆகியவற்றை கொடுத்து வந்தனர். இதனால் இயற்கையாக வாழும் தன்மையை மறந்த குரங்குகள், சாலைகளில் சுற்றுலா பயணிகள் தரும் உணவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

உணவுக்காக குரங்குகள் வெளியேறின

இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள், குரங்குகளுக்கு தின்பண்டங்கள்,உணவு பொருட்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர் அறிவிப்பு பதாகைகள் வைத்துள்ளனர். இருந்த போதிலும், சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவு பொருட்கள் கொடுப்பதை நிறுத்த முடியவில்லை.

இந்த நிலையில் உணவுக்காக சரணாலயத்தில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் வேதாரண்யம்,தோப்புத்துறை, ஆதனூர்,நெய்விளக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டன.

கூண்டு வைத்து பிடிக்கும் பணி

இந்த குரங்குகள் வீடுகளுக்குள் சென்று உணவு பொருட்களை தின்றும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தன. இந்த குரங்குகளை பிடித்து சரணாலயத்தில் விட பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நாகை வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா உத்தரவின் பேரில் கோடியக்கரை வனசரகர் அயூப்கான், வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் தோப்புத்துறையில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நான்கு குரங்குகளை பிடித்து பாதுகாப்பாக கோடியக்கரை சரணாலயத்தில் விட்டனர்.

மேலும் அங்கு சுற்றித்திரியும் குரங்குகள் விரைவில் பிடித்து சரணாலயத்தில் விடப்படும் என கோடியக்கரை வனசரகர் அயூப்கான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்