ரூ.2 கோடியே 10 லட்சம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு
சேலம் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தெரிவித்துள்ளார்;
சேலம் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தெரிவித்துள்ளார்.
கொடி நாள்
முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் முப்படைவீரர் கொடி நாள் விழா சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தலைமை தாங்கி உண்டியலில் நிதி வழங்கி கொடிநாள் வசூலை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முப்படை வீரர்களின் சேவைகளை நினைவு கூரும் வகையில் கடந்த 1947-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதி கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. கொடி நாளுக்காக திரட்டப்படும் நிதி போரில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊனமுற்றோரின் மறுவாழ்வு, ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
நலத்திட்ட உதவிகள்
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடிநாள் நிதி ரூ.1 கோடியே 96 லட்சத்து 18 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 10 லட்சத்து 24 ஆயிரம் கொடி நாள் நிதி வசூல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னாள் படைவீரர்கள் குடும்பங்களின் நலனுக்காக அனைவரும் அதிக அளவு கொடிநாள் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம், கல்வி உதவித்தொகை என 11 முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் வேலு மற்றும் முன்னாள் படைவீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.