ஐவர் கால்பந்து போட்டியில் தஞ்சை அணி சாம்பியன்

ஐவர் கால்பந்து போட்டியில் தஞ்சை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2023-07-29 21:59 GMT

இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை ஐவர் கால்பந்து போட்டி திருச்சி கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. தேசிய கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து நடத்திய இந்த போட்டியில் தமிழகம், கர்நாடகா, கேரளாவில் இருந்து மொத்தம் 64 அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகள் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும் நடத்தப்பட்டன. காலையில் நடந்த போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். போட்டிகளை எக்செல் குழும நிறுவனங்களின் தலைவரும், ரோட்டரி முன்னாள் ஆளுனருமான முருகானந்தம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குமார், துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டிகளின் முடிவில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தஞ்சை நடராஜன் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை ஷாஸ் அணியும் (திருச்சி), 3-வது இடத்தை ஐ.எம்.எப்.சி. அணியும் (திருவெறும்பூர்), 4-வது இடத்தை வெஸ்ட்டிரன் கிளப்பும் (தஞ்சை) பெற்றன. 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் திருச்சி வேலம்மாள் போதி கேம்பஸ் அணி முதலிடத்தை பிடித்தது. ஒய்.பி.ஆர் (ஒரத்தநாடு), ஆரென் கிளப் (மதுரை), சந்தானம் வித்யாலயா (திருச்சி) அணிகள் முறையே 2 முதல் 4 இடங்களை பிடித்தன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. இருபிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகளுக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.10 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்