தமிழ் புலிகள் கட்சியினர் நூதன போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகிலுள்ள 5 கிராமங்களில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாடு அமைக்க வலியுறுத்தி நேற்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்புலிகள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்டத் துணைத் தலைவர் பீமாராவ் தலைமையில், ஒருவரை இறந்தவர் போல வேடம் அணிந்து அமரவைத்து, அவரிடம் வெற்றிலை, பாக்கு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
கோவில்பட்டி அருகிலுள்ள நெட்டில்பெட்டி, வவ்வால் தொத்தி, வீரப்பட்டி, வில்லிசேரி, ஆத்திகுளம் ஆகிய கிராமங்களில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாடு அமைக்க வேண்டும், சூரங்குடி அருந்ததியர் மக்களுக்கு சாலை வசதி ெசய்து தரவேண்டும், நாலாட்டின்புத்தூர் அருந்ததியர் மக்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும், அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கோவில்பட்டி அம்பேத்கர் சிலையை பராமரிக்க வேண்டும், கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு முதல் எம்.எல்.ஏ. அலுவலகம் வரை மின்விளக்கு வசதி செய்து தர வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
உதவிகலெக்டரிடம் மனு
இதில் மாவட்ட செயலாளர் வீர பெருமாள், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட அமைப்பாளர் சின்னராஜ், நிர்வாகிகள் ஜெயக்குமார், முருகேசன் சுடலைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் அவர்கள் வழங்கினர். இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.