மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு அனுமதிக்காது

மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த காரணத்தை கொண்டும் தமிழக அரசு அனுமதிக்காது என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2023-06-01 18:36 GMT

ஆய்வுக்கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன், டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி பேசுகையில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தஙகு தடையின்றி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். மாநகராட்சி உதவிகமிஷனர் தலைமையிலான குழுவினர் காலை, மாலை வேளையில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

இதில், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் ரத்தினசாமி, மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

30 ஆண்டுகளாக அணுகி வருகிறேன்...

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் தற்போது காவிரி கூட்டுக்குடிநீர் பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதாவாறு மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் தமிழக அரசிடம் பேசினாலும் சரி, பேசா விட்டாலும் சரி மேகதாதுவை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. காவிரி தீர்ப்பாயத்தை நடத்தியவன் நான். மேகதாது என்பது காவிரி பிரச்சினை இல்லை. காவிரி பிரச்சினையை நான் 30 ஆண்டு காலமாக அணுகி வருகிறேன். எனக்கு இதில் நீண்ட நெடிய அனுபவம் உண்டு. இவர்கள் காவிரியில் இருந்து எவ்வளவு நீர் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று காவிரி தீர்ப்பாயத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ இந்த பிரச்சனிையை எழுப்பவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த காரணத்தை கொண்டும், தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்காது. இதில் உறுதியாக இருக்கிறோம்.

அனுமதிக்க மாட்டோம்...

மேகதாதுவால் அவர்களுக்கு வேண்டுமானால் பயன் இருக்கலாம். தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. எங்களால் விட்டுக் கொடுக்கவே முடியாது. அவர்கள் அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. அதனால் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம். எதையும் விட்டு கொடுக்க முடியாது. அணைக்கட்டு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் அப்பகுதி மக்களின் நலன் கருதி சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அப்பகுதியில் சாலை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் ரூ.49½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கூட்டரங்கத்தை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். முன்னதாக காட்பாடியில் உள்ள 45 கோவில்களுக்கு அறங்காவல் குழு பொறுப்பாளர்கள் நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்