சிறுபான்மை மக்களை தமிழக அரசு பாதுகாக்கிறது-சிவகாசியில் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு
சிறுபான்மை மக்களை தமிழக அரசு பாதுகாக்கிறது என்று சிவகாசியில் நடைபெற்ற முஸ்லிம் பள்ளியின் பவளவிழாவில் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
சிவகாசி,
சிறுபான்மை மக்களை தமிழக அரசு பாதுகாக்கிறது என்று சிவகாசியில் நடைபெற்ற முஸ்லிம் பள்ளியின் பவளவிழாவில் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
ஐம்பெரும்விழா
சிவகாசி முஸ்லிம் ஷாபி மத்ஹப் பெரிய பள்ளிவாசல் ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட முஸ்லிம் பள்ளியில் பவளவிழா ஆண்டையொட்டி முஸ்லிம் மழலையர், ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் ஐம்பெரும்விழா நேற்று இரவு நடைபெற்றது. முகம்மது சித்திக் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் பவள விழா மலர் வெளியீடு, பள்ளியின் 75-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் தபால் தலை அறிமுகம், பள்ளி வரலாற்று கல்வெட்டு திறப்பு, நவீன கூடுதல் உயிரியல் ஆய்வுகூடம் திறப்பு, கையுந்து பந்து மைதானம் திறப்பு ஆகிய விழாக்கள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர்அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசினார்.
பெண் கல்வி
அப்போது அவர் பேசியதாவது:-
30 பேருடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளி தற்போது 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது. இப்பள்ளி மாணவர்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். இங்கு படித்த பல மாணவர்கள் பல உயர் பதவிகளை அலங்கரிக்கிறார்கள். விரைவில் நீங்கள் புதிய கல்லூரியை தொடங்க வேண்டும். கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகம் இஸ்லாமிய சமூகம் தான். 1000 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட இந்த சமூகம் கல்வியில் ஏன் பின்தங்கி உள்ளது? 75 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பகுதியை சேர்ந்த பெரியவர்கள் பெண் கல்வியை பற்றி சிந்தித்து இந்த பள்ளியை தொடங்கி உள்ளனர். பெண் கல்வி இல்லாத சமூகம் ஒருநாளும் முன்னேறாது.
அரசு பாதுகாக்கிறது....
இஸ்லாமிய சமூகம் இன்று பெரிய நெருக்கடியில் உள்ளது. சொந்த நாட்டிலேயே அவர்களை அன்னியப்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கிறது. தமிழக அரசு சிறுபான்மை மக்களை பாதுகாக்கிறது. எனவே தமிழ் சமூகத்தின் அடையாளங்களை நாம் தூக்கி நிறுத்த வேண்டும். எல்லா நேரத்திலும் நம்மை நாம் தமிழர்களாகவே அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடையாளத்தோடு இருந்தால் தான் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் அமீர்கான், ஜமாத் தலைவர் பீர்முகம்மது, முஸ்லிம் பள்ளிகளின் தாளாளர் முகைதீன் அப்துல்காதர், செயலாளர் சிக்கந்தர் பாட்ஷாகனி, துணைத்தலைவர் முகம்மது நவாப், பொருளாளர் அன்வருதீன், துணை செயலாளர் சதக்கத்துல்லா, மதரசா நிர்வாகி நசீர்அலி ஜின்னா, நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்யது இப்ராகீம், முகம்மது மைதீன் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.