கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சாா்பில் பெரம்பலூரில் நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. பாலக்கரை ரவுண்டானா அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தினுள் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மரியதாஸ், மாநில துணைத்தலைவர் சிவக்குமாா் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு உரிய காலத்தில் வழங்க வேண்டும். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.