சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக இரண்டு வழக்கறிஞர்களை நியமிக்க சுப்ரீம்கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை..!
இரண்டு வழக்கறிஞர்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம்கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.;
சென்னை,
வழக்கறிஞர்கள் செந்தில் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு கொலீஜியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் குமார் கடந்த 28 ஆண்டுகளாக வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளில் வாதிட்டுள்ளதாகவும் , கிரிமினல் , சிவில் வழக்குகள் தொடர்பாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அருள் முருகன் கடந்த 24 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதாகவும், சென்னை ஐகோட்டு மற்றும் பல்வேறு தீர்ப்பாயங்களில் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், 2 மாதங்களாக அந்த பரிந்துரை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து மத்திய சட்ட அமைச்சகம் கொலீஜியம் பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பியது. இதையடுத்து, பரிந்துரையை ஏற்றுக் கொண்டு நான்கு பேரையும் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மேலும் இருவரை நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.