சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
சாலை வசதி கேட்டு சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டன
பொள்ளாச்சி
சாலை வசதி கேட்டு சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டுக்கு உட்பட்ட பூங்கா நகர், காமராஜ் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் செல்ல வசதி இல்லாததால் தாழ்வான இந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் நேற்று சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர். இதை தொடர்ந்து பொதுமக்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் தரப்பில் பேரூராட்சியில் நிதி இல்லாததால் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க முடியவில்லை. நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு கொடுத்தால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை
இதற்கு பொதுமக்கள் தரப்பில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு குடிநீர், வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் செலுத்தி வருகிறோம். இதற்கிடையில் ஒரு குடும்பத்துக்கு ரூ.30 வீதம் கொடுக்க வேண்டிய உள்ளது. பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தான் பேரூராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் உள்ளனர். மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே மழைநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது தற்காலிகமாக சாலை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 6 மாத காலத்திற்குள் சாலை வசதியும், அதை தொடர்ந்து மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.