ஸ்டூடியோ உரிமையாளரை கொலை செய்தவாலிபருக்கு ஆயுள் தண்டனை:தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

ஸ்டூடியோ உரிமையாளரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-12-22 18:45 GMT

ஸ்டூடியோ உரிமையாளர்

தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டம் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வபாண்டியன் (வயது 45). இவர், மாரியம்மன் தெருவில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் (29) என்பவர், தனது நண்பர்களுடன் மதுபோதையில் ஸ்டூடியோ முன்பு நின்று கையில் கத்தியுடன் தகராறு செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கிருந்து செல்லுமாறு அவர்களை செல்வபாண்டியன் அறிவுறுத்தினார். ஆனால், அவர்கள் செல்லவில்லை. இந்நிலையில் அந்த வழியாக போலீசார் வருவதை பார்த்ததும், கார்த்தீஸ்வரனும் அவருடைய நண்பர்களும் அங்கிருந்து ஓடி விட்டனர்.

போலீசாருக்கு செல்வபாண்டியன் தான் தகவல் கொடுத்து இருப்பார் என்பதால், அவரை கொலை செய்ய கார்த்தீஸ்வரன் திட்டமிட்டார். இதற்காக 2018-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அவர் ஒரு கத்தியுடன் செல்வபாண்டியனின் ஸ்டூடியோ முன்பு நின்று தகராறு செய்தார்.

கத்தியால் குத்திக்கொலை

பின்னர் அவர் ஸ்டூடியோவுக்குள் அத்துமீறி நுழைந்தார். இதைப் பார்த்த பக்கத்து கடைக்காரர், செல்வபாண்டியனின் தம்பி மணவாளனுக்கு (46) தகவல் கொடுத்தார். அவர் அங்கு விரைந்து வந்து கடைக்குள் நுழைந்த போது, அங்கே செல்வபாண்டியனை கார்த்தீஸ்வரன் கத்தியால் சரமாரியாக குத்திக் கொண்டு இருந்தார். பின்னர் அவரை தள்ளிவிட்டுவிட்டு கார்த்தீஸ்வரன் தப்பி ஓடிவிட்டார்.

படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வபாண்டியனை அவருடைய தம்பி மீட்டு, ஒரு ஆட்டோவில் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் மணவாளன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தீஸ்வரனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சஞ்சய் பாபா நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கார்த்தீஸ்வரனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்