மாலை அணிவித்து மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
கோடைவிடுமுறை முடிந்து தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடம் பிடித்து அழுத குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து ஆசிரியர்கள் சமாதானம் செய்தனர்.;
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடைவெயில் அதிகமாக இருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்ததையடுத்து இருகட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையொட்டி மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் ஏற்கனவே தூய்மை பணி நடந்தது. மேலும் கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க கொசு மருந்தும் அடிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்தன.
மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு
இதற்கிடையே மாணவ-மாணவிகளை உற்சாகமாக வரவேற்கும் வகையில் பள்ளிகளில் அலங்கார தோரணம், பலூன்கள் கட்டப்பட்டு இருந்தன. அதிலும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தடல்புடலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒருசில தொடக்கப்பள்ளிகளின் முன்பு பேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேநேரம் பெரும்பாலான மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் மீது பன்னீர் தெளித்து நெற்றியில் சந்தனம் வைத்து மகிழ்ச்சியுடன் ஆசிரியைகள் வரவேற்றனர். இதேபோல் சில பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பூ, மிட்டாய் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுதவிர பல பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்தும், தலையில் கிரீடம் சூட்டியும் வரவேற்றனர். இதனால் பள்ளிக்கு ஒருவித பதற்றத்துடன் வந்த மாணவ-மாணவிகள் சகஜ நிலைக்கு திரும்பி உற்சாகம் அடைந்தனர்.
அடம்பிடித்த மாணவர்கள்
ஆனால் 1-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்பறையில் அமர்வதற்கு மறுத்து அழுது அடம்பிடித்த காட்சிகளை பெரும்பாலான பள்ளிகளில் பார்க்க முடிந்தது. ஒருசில குழந்தைகள் பள்ளியை பார்த்ததும் தந்தையின் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்குவதற்கு மறுத்து அழுதனர். பெற்றோர் அன்பாக பேசி சமாதானம் செய்தும், மிரட்டி பார்த்தும் சில குழந்தைகள் மறுத்தனர்.
இதையடுத்து அடம்பிடித்த குழந்தைகளிடம் ஆசிரியைகள் கனிவாக பேசியதோடு பலூன், மிட்டாய் கொடுத்து வகுப்பறைக்கு அழைத்து சென்றனர். அதற்கு சக மாணவ-மாணவிகளும் உதவி செய்தனர். ஒருசில பெற்றோர் பள்ளிக்கு வெளியே காத்திருந்து குழந்தைகளை சமாதானம் செய்த காட்சிகளும் அரங்கேறின.
காலை உணவு
இதற்கிடையே அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டன. அதை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வாங்கினர். அதேபோல் பள்ளிகளில் நேற்றைய தினம் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. இந்த காலை உணவை மாணவ-மாணவிகள் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.