மாணவரின் உடல் கரை ஒதுங்கியது

அஞ்சுகிராமம் அருகே கடலில் குளித்தபோது அலையில் இழுத்து செல்லப்பட்ட மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.

Update: 2022-09-01 13:40 GMT

அஞ்சுகிராமம், 

அஞ்சுகிராமம் அருகே கடலில் குளித்தபோது அலையில் இழுத்து செல்லப்பட்ட மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.

பள்ளி மாணவர்

அஞ்சுகிராமம் அருகே உள்ள வட்டக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன், டெம்போ டிரைவர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், திபாகர் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர்.

தற்போது கண்ணன் காணிமடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தார். கண்ணனின் மகன் திபாகர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் திபாகர் தனது தாயார் மற்றும் தங்கையுடன் அஞ்சுகிராமத்தை அடுத்த ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றார். அலைகளை கண்ட உற்சாகத்தில் திபாகர் குளிப்பதற்காக கடலில் இறங்கினார்.

அலை இழுத்து சென்றது

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட திபாகரின் தாயாரும், தங்கையும் அதிர்ச்சியில் அலறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடலுக்குள் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் தேடியும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் கரை ஒதுங்கியது

இந்தநிலையில், நேற்று காலையில் மாணவரை அலை இழுத்து சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

இதைபார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கன்னியாகுமரி கடலோர காவல்படை குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் திவாகரின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் மாணவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடைேய உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விடுமுறைக்கு ஊருக்கு வந்த நிலையில் கடலில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்