மாற்றுத்திறனாளி தந்தையை சக்கர நாற்காலியில் அமரவைத்து தள்ளி வந்த மாணவன்

மாற்றுத்திறனாளி தந்தையை சக்கர நாற்காலியில் அமரவைத்து பள்ளிக்கு மாணவன் தள்ளி வந்தான்.

Update: 2022-06-18 21:22 GMT

தா.பேட்டை:

தா.பேட்டை அருகே உள்ள தேவானூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 41). இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு திலகன் உள்பட 2 மகன்கள் உள்ளனர். சரவணன் போர்வெல் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தலையில் ஏற்பட்ட கட்டி காரணமாக சரவணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு மாற்றுத்திறனாளியானார். திலகன் தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சசிகலா 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்று தனது கணவர் மற்றும் 2 மகன்களை கவனித்து வருகிறார்.

இந்தநிலையில் குடும்ப வறுமை காரணமாக திலகனை அரசு மாணவர் விடுதியில் தங்கி படிக்க வைப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்க மாற்றுத்திறனாளி சரவணன், திலகன் படிக்கும் பள்ளிக்கு சக்கர நாற்காலியில் புறப்பட்டுள்ளார். இதையடுத்து தனது தந்தையை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து தேவானூர் கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் தா.பேட்டையில் உள்ள தான் படிக்கும் பள்ளிக்கு திலகன் தள்ளிக்கொண்டு வந்தார். அங்கு சரவணன், பள்ளி ஆசிரியரை சந்தித்தார். பின்னர் இதுகுறித்து சரவணன் கூறுகையில், தமிழக அரசால் வழங்கப்பட்ட சக்கர நாற்காலியில் முன்புறம் சுழலும் சிறிய சக்கரங்கள் இருப்பதால் முன்புறமாக செல்ல முடியாது. மேலும் எனது ஒரு கை செயலிழந்ததால் வாகனத்தை இயக்குவது சிரமம். பள்ளிக்கு வந்ததால், என்னை சக்கர நாற்காலியில் அமரவைத்து எனது மகன் தள்ளிக்கொண்டு வந்தான். மற்ற நேரங்களில் ஒரு காலால் தள்ளிவிட்டுக் கொண்டே பின்புறமாக நான் தா.பேட்டைக்கு தனியாக சென்று வருவேன். பேட்டரி வைத்த சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்பித்தும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. எனவே அரசு எனக்கு பேட்டரியுடன் கூடிய சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்