தலைமை ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த மாணவி

தலைமை ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-08-24 18:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், செவலூரை சேர்ந்தவர்கள் ஆட்டோ டிரைவர் ஜெகன்மோகன்- ராஜேஸ்வரி. இவர்களின் மகள் நர்மதா (வயது 9). இவர் செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். நர்மதாவின் சித்தி பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார். நர்மதா படித்து வரும் அதே பள்ளியில் அவரது சித்தி மகனும் படித்து வருகிறார். நர்மதா, தனது சித்தி மகனை கருப்பட்டி என்று அழைத்துள்ளார். இதனை அந்த சிறுவன் தனது வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஆசிரியர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியர் அங்கிருந்த பிரம்பால் நர்மதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு வரும் வழியில் நர்மதா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நர்மதாவை ஆசுவாசப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார். மேலும் வீட்டிற்கு வந்த தந்தையிடம், நான் இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனக்கூறி அழுதுள்ளார். இதற்கிடையே நர்மதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்