பருப்பு வகைகளின் இருப்பை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

Update: 2023-02-02 19:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் முகவர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் பருப்பு வகைகளின் இருப்பை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பருப்பு வகைகளின் இருப்பு அளவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான முகவர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசும்போது கூறியதாவது:-

செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குதல், பண்டிகை காலங்களில் பருப்புகளின் விலை உயர்வு மற்றும் பதுக்கல்களை தடுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றியமையா பண்டங்கள் சட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் இருப்பின் அளவினை முகவர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நுகர்வோர் துறையின் கண்காணிப்பு இணையதளமான http://fcainfoweb.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

முழு ஒத்துழைப்பு

இந்த இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பருப்புகளின் இருப்புகளை உறுதி செய்திட வேண்டும். பருப்புகளின் இருப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு முகவர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர்கள், முகவர்கள், வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்