பரந்தூர் விமான நிலையம் அமையும் இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்தது - மத்திய மந்திரி வி.கே.சிங்

பரந்தூர் விமான நிலையம் அமையும் இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்தது என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.;

Update: 2023-01-27 22:26 GMT

மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு வருகை தந்தார். இங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லையில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் விமான நிலையத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெறும்.  சேலம்-சென்னை 8 வழிச்சாலையை பசுமை வழிச்சாலையாக மாற்றம் செய்து திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. அதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. மக்களின் போராட்டம் குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ள வேண்டும். நாகர்கோவில்-திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளில் உள்ள பிரச்சினைகளை தீர்த்த பிறகு பணிகள் மீண்டும் தொடரும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது, கூட்டணி குறித்து பேசுவது ஆகியவற்றை பா.ஜனதா தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா, பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், நீலமுரளியாதவ், வேல்ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்