நிழற்கூரை உள்ளிட்ட கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-15 16:59 GMT

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய பஸ் நிலையம்

திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையம் 1985-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இங்கிருந்து தினமும் சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, கோவை போன்ற வெளிமாவட்டங்களுக்கும், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும் திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரி போன்ற வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் மட்டுமின்றி பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. இதனால் ஆன்மிக ரீதியாக தினமும் ஏராளமான மக்கள் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வருகின்றனர்.

மேலும் தொழில் ரீதியாகவும், வேலை ரீதியாகவும் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் இந்த பஸ் நிலையத்தில் தினமும் காலை சுமார் 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இருக்கை வசதிகள்

இந்த பஸ் நிலையத்தில் வேலூர் பஸ்கள் நிற்கும் பகுதியிலும், தண்டராம்பட்டு பஸ்கள் நிற்கும் பகுதியிலும் என 2 இடங்களில் நிழற்கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் குறைந்த அளவிலான இருக்கை வசதிகளே செய்யப்பட்டு உள்ளது.

இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பெரும்பாலான முதியோர்கள் முதல் குழந்தைகள் வரை இருக்கை வசதி இல்லாமல் தரையில் அமர வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.

மேலும் நிழற்குடை பகுதி சுத்தமில்லாமல் குப்பை கூளமாக காட்சி அளிக்கிறது. பஸ் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிகள் சேதம் அடைந்து பயன்பாடின்றி காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி நிழற்கூரை பகுதியில் பொதுமக்கள் நிற்கும் பகுதியில் அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களில் மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிழற்கூரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நிற்கவும் இடமில்லாமல், அமரவும் இடமில்லாமல் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.

அசுத்தமான சுகாதார வளாகம்

இந்த பஸ் நிலையத்தில் தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி சுகாதார வளாகம் உள்ளது.

இந்த சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இங்கு போதிய தண்ணீர் வசதியில்லாமல் உள்ளது.

தொடர்ந்து சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் அங்கு கால் வைக்க முடியாத நிலை உள்ளது. சில சமயங்களில் அந்த சுகாதார வளாகத்தில் இருந்து வெளியே வரும் துநாற்றம் பஸ் நிலையத்தில் நிற்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.

மேலும் 2 இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இவை கடந்த சில நாட்களில் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.

போதிய குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடையில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

விரிசல் அடைந்த நிழற்கூரை

மத்திய பஸ் நிலையத்தின் நிழற்கூரையின் மேல் பகுதி சேதமடைந்து பெரும்பாலான இடங்களில் விரிசல் விட்டும், சில இடங்களில் பெயர்ந்தும், உடைந்தும் காணப்படுகிறது.

இதனால் நிழற்கூரையில் சில இடங்களில் சிமெண்டு காரைகள் உடைந்து கம்பிகள் வெளியே தென்படுகின்றன. மேலும் நிழற்கூரையின் தூண்களும் விரிசல் விட்டு பெயர்ந்து காணப்படுகின்றன.

அது மட்டுமின்றி பஸ் நிலையத்தில் வணிக வளாகத்தின் சுவர்களும் விரிசல் விட்டு பெயர்ந்து காணப்படுகிறது.

அங்குள்ள கடைக்காரர் ஒருவர் கூறுகையில், மழை நாட்களில் மழைநீர் கடைக்குள் மேலிருந்து ஒழுகும் நிலையில் உள்ளது.

நாங்களே அவ்வப்போது அதனை சரி செய்து கொள்கிறோம் என்றார்.

பஸ் நிலையத்தில் உள்ள நிழற்கூரை விரிசல் விட்டு சிமெண்டு காரைகள் உடைந்து கீழே விழுந்த சம்பவங்களும் பல நடைபெற்று உள்ளது.

சமீபத்தில் திருவண்ணாமலைக்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பயணிகள் கோரிக்கை

ஆனால் இதுவரை அதற்கான எந்தவித பணிகளும் நடைபெற வில்லை.

எனவே திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நிழற்கூரைகள் உள்பட கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுவதால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் நிலையத்தில் உள்ள நிழற்கூரை உள்ளிட்ட கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும், பஸ் நிலையத்தை அடிக்கடி சுத்தம் செய்து தூய்மையாக வைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்