தாய் இறந்தது தெரியாமல் வெகுளியாக விளையாடிய மகன்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் இறந்ததுகூட தெரியாமல் வெகுளியாக விளையாடிக்கொண்டு இருக்கும் மகனை கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Update: 2023-10-10 19:24 GMT

4 பேரும் உறவினர்கள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அரியலூர் மாவட்டம் விரகாலூர் அறிஞர் அண்ணா காலனியைச் சேர்ந்த ரவி (வயது 45), இவரது மனைவி சிவகாமி (42), சப்பாணி மனைவி வெண்ணிலா (43), கிருஷ்ணன் மனைவி ராசாத்தி (45), திருமானூரை சேர்ந்த முருகாநந்தம் உள்பட 11 பேர் பலியாகினர். மேற்கண்டவர்களில் ரவி, சிவகாமி, வெண்ணிலா, ராசாத்தி ஆகிய 4 பேரும் உறவினர்கள் ஆவர்.

இதில் கணவன்-மனைவியான ரவியையும், சிவகாமியையும் பறிகொடுத்த அந்த குடும்பத்தினர் பெரிதும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் கார்த்திக் என்பவரும் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார்.

மாப்பிள்ளை பார்த்து வந்தனர்

இந்த விபத்தில் இறந்த ராசாத்தி என்பவரின் கணவர் ஏற்கனவே இறந்த நிலையில் அவர் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 5 மகள்கள் உள்ளனர்.

இவர்களில் 4 பேருக்கு திருமணமான நிலையில் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில், இந்த கோர விபத்தில் சிக்கி ராசாத்தி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் உயிரிழந்த வெண்ணிலாவின் கணவர் சப்பாணி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

தாய் இறந்ததுகூட தெரியவில்லை

இதில் மூத்த மகன் திருமணமாகி அவரது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் தினேஷ் (20), 3-வது மகன் சண்முகவேல் (16) ஆகிய இருவருடன் வெண்ணிலா வசித்து வந்தார். இதில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். வெளியுலகம் தெரியாததால் தினேசை எப்போதும் அவர் தனது கண்காணிப்பிலேயே வைத்துக்கெண்டு பட்டாசு ஆலையில் வேலைக்கு சென்று அவர்களை காப்பாற்றி வந்தார்.

தற்போது வெண்ணிலா உயிரிழந்து விட்ட நிலையில் இந்த 2 பேரும் தனிமையில் தவித்து வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட தினேஷுக்கு தாய் இறந்தது கூட தெரியாமல் வெகுளியாக விளையாடிக்கொண்டு இருந்தார். இதை அக்கம்பக்கத்தினர் பரிதாபத்துடன் பார்த்தது நெஞ்சை நெகிழ செய்தது. தாயை இழந்த தினேஷ், சண்முகவேலின் நிலை அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்களுக்கு அரசு ஏதேனும் உதவிட அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்