முன்னாள் போலீஸ் ஏட்டுவை கொன்று உடலை ஆற்றில் வீசிய மகன்

ஊத்தங்கரை அருகே முன்னாள் போலீஸ் ஏட்டுவை, அவருடைய மகன் கொலை செய்து உடலை ஆற்றில் வீசியுள்ளார். கூட்டாளியுடன், அவர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.

Update: 2022-12-14 19:30 GMT

ஊத்தங்கரை அருகே முன்னாள் போலீஸ் ஏட்டுவை, அவருடைய மகன் கொலை செய்து உடலை ஆற்றில் வீசியுள்ளார். கூட்டாளியுடன், அவர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.

முன்னாள் போலீஸ் ஏட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). முன்னாள் போலீஸ் ஏட்டு. இவருடைய மனைவி சித்ரா (43). இவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஜெகதீஷ்குமார் (19). செந்தில்குமார், போலீஸ் துறையில் பணியாற்றிய போது பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் முதலில் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு, பிறகு போலீஸ் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

மாயம்

ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் மாயமானார். இதுகுறித்து அவருடைய தாய் பாக்கியம் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாயமான செந்தில்குமார் மற்றும் அவருடைய மகன் ஜெகதீஷ்குமார், மற்றொருவரின் செல்போன் சிக்னல் ஒரே இடத்தை காட்டியதும், பின்னர் அந்த செல்போன் எண்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆனதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜெகதீஷ்குமாருடன் இருந்த மற்றொரு செல்போன் எண் யார் என போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல்லை சேர்ந்த கமல்ராஜ் (37) என்பது தெரிய வந்தது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

கோர்ட்டில் சரண்

நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் ஊத்தங்கரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வருமாறு இருவரையும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி ஸ்ரீவத்சவா முன்பு சரணடைந்தனர். அப்போது கடந்த செப்டம்பர் 16-ந் தேதி செந்தில்குமாரை கொலை செய்து பாவக்கல் தென்பெண்ணையாற்றில் வீசியதாக கூறியுள்ளனர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்படி அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக செந்தில்குமாரின் மனைவியும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருமான சித்ராவிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தி வருகிறார்.

போலீஸ் வாகனங்களை ஏரி, கண்மாயில் தள்ளியவர்

கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரை கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அறியாதவர் இருக்க முடியாது. கடந்த 1997-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 2009-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முரளியின் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது போலீஸ் வாகனத்தை தொப்பூர் கணவாயில் உருட்டி விட்டவர். இந்த வழக்கில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதேபோல கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் வாகனம் ஒன்றை பாரூர் ஏரியில் தள்ளி விட்டதாகவும் அவர் மீது புகார் உள்ளது. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த செந்தில்குமார் முதலில் சஸ்பெண்டு செய்யப்பட்டு, பிறகு கடந்த 2012-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்