சமூகநீதி கூட்டமைப்பினர் நூதன போராட்டம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சமூகநீதி கூட்டமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-12 18:07 GMT

நூதன போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது மனு கொடுக்க வந்த பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு வாழை இலையை விரித்து, அதன் மேல் சோற்றை கொட்டி, அதில் முழு பூசணிக்காய் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

10 சதவீத இட ஒதுக்கீடு

அப்போது அவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசை கண்டித்தும், அந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசின் இந்த செயல் ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது. இதையடுத்து அவர்களில் சிலர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

நாய்கள் தொல்லை

செட்டிகுளம் ஊர் பொதுமக்கள் சார்பாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் திருநாவுக்கரசு கலெக்டரிடம் கொடுத்த மனுவில், செட்டிகுளத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. குன்னம் தாலுகா, வடக்கலூர் அருகே உள்ள பழைய அரசமங்கலத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் வடக்கலூர் அருணாச்சலேஸ்வரர் வகையறா கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக, கோவில் இடம் என்று தெரியாமல் 27 குடும்பங்கள் வசித்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கோவில் செயல் அலுவலர் அந்த இடத்தை விட்டு காலி செய்யுமாறு கூறினார்.

கோவில் நில அனுபவதாரர்களாக...

பின்னர் நாங்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டதன் பேரில் குடியிருந்த கோவில் இடத்திற்கு நியாயத்தீர்வை செலுத்துவதற்கு தயாராக இருந்தோம். இது தொடர்பாக ஆவனம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த நடவடிக்கையும் கொரோனா கால நடவடிக்கையால் கால தாமதம் ஆனது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒரு அறிவிப்பு கடிதம் எங்களுக்கு வந்தது. அதில் உங்களை கோவில் குத்தகைதாரராக ஏற்க முடியாது. ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவதால் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் இந்த இடத்தை விட்டு சென்றால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நியாயதீர்வை பெற்று கொண்டு கோவில் நில அனுபவதாரரர்களாக ஏற்றுக்கொண்டு எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

288 மனுக்கள்

வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கொடுத்த மனுவில், 46 ஆண்டு காலமாக பயிர் செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 288 மனுக்களை பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்