பெண்ணை கடித்துக் கொன்ற பாம்பை அடித்துக் கொன்ற உறவினர்கள்
களக்காடு அருகே பெண்ணை கடித்துக் கொன்ற பாம்பை உறவினர்கள் அடித்துக் கொன்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் தோமஸ் (வயது 57). இவரது மனைவி மேரி பாக்கியமணி (53). இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இதற்காக வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் வைக்கோல் படப்பு வைத்துள்ளனர். இவர்களின் தோட்டத்தில் நீண்ட நாட்களாக 15 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று சுற்றி வந்தது.
கடந்த 20-ந் தேதி மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார். அப்போது அவரை அங்கிருந்த சாரை பாம்பு கடித்தது. இதனைதொடர்ந்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 21-ந் தேதி மேரி பாக்கியமணி பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், ஊர் மக்கள் தோட்டத்திற்கு சென்று மேரி பாக்கியமணியை கடித்த பாம்பை தேடினர். அப்போது ஒரு பொந்துக்குள் பாம்பு பதுங்கி இருந்ததை கண்டனர். உடனே அந்த பாம்பை வெளியே எடுத்து கம்பால் அடித்தே கொன்றனர். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.