ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே ஒற்றை யானை மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது.
காட்டு யானைகள்
பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் உள்ள சேராங்கல், மோர்தானா, அரவட்லா, குண்டலப்பல்லி உள்ளிட்ட காப்புக் காடுகளில் சுற்றித் திரிந்து வரும் ஒற்றை யானை மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து வெளியேறிய குட்டி யானையுடன் 5 காட்டு யானைகள் கூட்டம் சுற்றி திரிகின்றன.
இந்த யானைகள் சேராங்கல், பத்தலப்பல்லி, குண்டலப்பல்லி, அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர், முத்துக்கூர், எருக்கம்பட்டு, கோட்டையூர் உள்ளிட்ட கிராமங்களில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் புகுந்து அறுடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள், மா, தென்னை, வாழை, வேர்க்கடலை தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
பயிர்கள் நாசம்
இந்த நிலையில் குண்டலப்பல்லி வனப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்த ஒற்றை யானை நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சேராங்கல் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சேராங்கல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரை நாசப்படுத்தியது.
பின்னர் அருகிலுள்ள பாபு என்வருடைய வாழைத்தோப்பில் புகுந்து வாழை மரங்களை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டது. விவசாயிகள் பட்டாசு வெடித்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் யானையை விரட்டியடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களாக ஒற்றை யானையின் அட்டகாசம் நீடித்து வருவதால் விவசாயிகள் கவலைக்குள்ளாகி உள்ளனர்.